×

அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து டெல்லிக்கு அனுப்ப முயன்ற ரூ.54 லட்சம் காப்பர் பறிமுதல்: தொழிலதிபரிடம் விசாரணை

திருவொற்றியூர்: அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து டெல்லிக்கு அனுப்ப முயன்ற ரூ.54 லட்சம் மதிப்புள்ள காப்பர் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, தொழிலதிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (28). தொழிலதிபரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாதவரத்திற்கு வந்து, இங்கிருந்து  வடமாநிலங்களுக்கு காப்பர், பித்தளை பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி டெல்லியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சுமார்  28 டன் 400 கிலோ எடை கொண்ட காப்பரை அனுப்ப திட்டமிட்டுள்ளார். பின்னர், அதை கன்டெய்னர் பெட்டியில் அடைத்து சீல் வைத்து, திருவொற்றியூர் அருகே உள்ள கான்காடு சரக்கு பெட்டகத்தில் வைத்திருந்தார்.

மறுநாள் சரவணகுமார் வந்து கன்டெய்னர் பெட்டியை பார்த்தபோது, சீல் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8 டன் காப்பர் திருடு போனது தெரிய வந்தது. இது சம்பந்தமாக திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சரவணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, சரவணகுமாரிடம் பணிபுரிந்த ரவி (42), இல்மன் பாபு (56), அணில் குமார் (35), நாராயணகுமார் (40), கிரிசன் (40), ரவி, இளவரசன் ஆகியோர் கன்டெய்னர் பெட்டியை உடைத்து அதிலிருந்து 8 டன் காப்பரை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான ரவி, இளவரசன் ஆகியோரை தேடி வருகின்றனர். மேலும், சாத்தங்காடு பகுதியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 6 டன் எடை கொண்ட காப்பரை லாரியுடன் கைப்பற்றினர். மேலும் விசாரணையில், சரவணகுமார் டெல்லிக்கு அனுப்ப இருந்த காப்பர் பொருட்ளுக்கு முறையான ஜிஎஸ்டி கட்டவில்லை என்றும், முறைகேடாக டெல்லி அனுப்ப முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து  ஜி.எஸ்.டி அலுவலர் தாமரை மணாளன் கான்காடு சரக்கு பெட்டகத்திற்கு வந்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள  20 டன் காப்பர் உள்ள கன்டெய்னர் பெட்டியை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர். இதுதொடர்பாக, தொழிலதிபர் சரவணகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Delhi , Rs 54 lakh copper seized for evading government tax and trying to send it to Delhi: Interrogation of businessman
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...